காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நரிக்குறவர் குழந்தைகளை மாலை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்த ஆசிரியர்கள்


காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, நரிக்குறவர் குழந்தைகளை மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஆசிரியர்கள் பள்ளியில் சேர்த்தனர். இதை பார்த்த அவர்களின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். 

தாம்பரம் அடுத்த மப்பேடு கிராமம் பகுதியில் நரிக்குறவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நரிக்குறவர் பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பாசி மணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பலர் உள்ளனர். இவர்களில் பலர் பள்ளிக்கு சென்றாலும் இடையில் நின்று விடுகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் குழந்தைகளை தொடர்ந்து பள்ளியில் படிக்க வைக்க அந்த பகுதியில் உள்ள திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை பனிமயம் பெர்னாண்டோ தலைமையில் ஆசிரியைகள் முயற்சி மேற்கொண்டு நரிக்குறவர் குடியிருப்பிற்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக இடை நின்ற மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகர், வட்டார கல்வி அலுவலர்கள் ராபர்ட் வில்லியம், பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியை பனிமயம் பெர்னாண்டோ மற்றும் பள்ளி ஆசிரியைகள், அப்பகுதி பொதுமக்கள் மப்பேடு நரிக்குறவர் குடியிருப்பிற்கு நேற்று சென்றனர். 

அங்கு  நரிக்குறவர் குழந்தைகள் 15 பேரை மாலை அணிவித்து அவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பாட புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், சீருடைகள் ஆகியவைகளை சீராக வழங்கி மாட்டு வண்டியில் நரிக்குறவர் குழந்தைகளை மாலை அணிவித்து கிரிடம் சூட்டி மப்பேடு நரிக்குறவர் குடியிருப்பில் இருந்து திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். 

ஊர்வலத்தில் திருவஞ்சேரி பகுதி பொதுமக்கள், நரிக்குறவர்களும் கலந்து கொண்டு பள்ளிக்கு வந்தனர். ஊர்வலமாக அழைத்து வந்த நரிக்குறவர் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். பள்ளிக்கு வந்த நரிக்குறவர் குழந்தைகளை பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியைகள் கைதட்டி வரவேற்றனர்.

இதுகுறித்து நரிக்குறவர் குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ‘‘தங்கள் குழந்தைகளை மாலை மரியாதையுடன் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மற்ற குழந்தைகளை போல தங்கள் குழந்தைகளுக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து கிடைத்து அவர்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதே தங்களது ஆசை’’ என்று ஆனந்த கண்ணீர் தெரிவித்தனர்.

Comments