அரசுப்பள்ளியில் ஓர் நெகிழ்சி சம்பவம்...! உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..!


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.

இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லவேண்டும் எனக்கூறி 108 ஆம்புலன்சையும் வரவைத்து பிராணவாயு சிலிண்டர் உதவியுடன் அனுப்பிவைத்துள்ளனர். 


ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து நாடித்துடிப்பு ரொம்ப குறைந்துவிட்டது. பிராணவாயுவை எடுத்தால் எதுவும் நடக்கலாம் என்று சொல்லிவிட சக மாணவர்கள் கதறினார்கள்.

கூலி வேலைக்குச் சென்ற அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அப்போது, மருத்துவமைனையில் இருந்து வெளியில் கொண்டு போறதா இருந்தாலும் கொண்டு போங்க என்று மருத்துவமனையில் சிலர் சொல்ல கதறிய பெற்றோர் வீட்டின் அருகே இருக்கும் கொஞ்ச நிலத்தை விற்க அவசரமாக பக்கத்து இடத்துக்காரரை பணத்துடன் அழைத்தும் விட்டனர். அதே நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.


அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து இரு ஆசிரியர்களும் தஞ்சை நோக்கி சென்றார்கள். அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது மூச்சுக்காக பிராணவாயு வைத்து, கண்கள் மேல் நோக்கி, எந்த அசைவும் இல்லாத நிலையில் இருந்துள்ளான்.. அருகில் நின்ற மருத்துவர்கள் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்றுவிடும் நிலையில் உள்ளது என்று சொல்ல.. கண் கலங்கிய ஆசிரியர்கள் மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான் கை, கால்களை அசைத்தான்.. உனக்கு ஒன்றும் இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க.. எங்களை தெரியுதா என்று ஆசிரியர்கள் கேட்க.. மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான். இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10 சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான் இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.

அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும் கண்ணீரை நிறுத்திவிட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் இல்ல சார் நல்லா இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க சார் என்று சொன்ன பிறகு.. சார் ஒன்னுக்கு போகனும் என்று சொல்ல அருகிலேயே சிறுநீர் கழிக்க வைத்தனர். கை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம் அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்துவிட்டு ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து மாணவனை பார்த்தார்.


அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்தியமூர்த்தி மாணவனின் நிலை பற்றி அடுத்தடுத்து போனில் கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆசிரியர்கள் வெளியே வரும் வரை மாணவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மாணவனுக்காக காத்திருந்தனர். 
நாங்கள் ஏற்றிய பிறகு உயிரை காக்க வேண்டும் என்று தான் போராடுறோம் அதே போல கொண்டு வந்துட்டோம். ஆனாலும் மருத்துவ சிகிச்சையைவிட ஆசான்களின் குரல் சிகிச்சை தான் மாணவனை காப்பாற்றி இருக்கிறது என்றனர்.


இரவு 9 மணிக்கு பிராணவாயு வேண்டாம் என்று அகற்றச் சொன்ன மாணவன் தனக்கு பசிக்கிறது என்று டீ வாங்கி வரச்சொல்லி குடித்திருக்கிறான். 10.30 மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவன் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றும் சிகிச்சை தொடங்கியுள்ளது. பணி மருத்துவர்களும் ஆசிரியர்களை பாராட்டினார்கள். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படக் காட்சியை போல தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இரு ஆசிரியர்கள் செய்துள்ளனர் என அனைவரும் பரவலாக ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஆசிரியர் மணிண்டன்.. மாணவனுக்கு உடல்நலமில்லை என்பது மருத்துவமனைக்கு சென்ற போது தான் தெரியும். சுயநினைவின்றி அசைவற்று கிடந்தான். மருத்துவர்கள் சிலிண்டர் உதவியில் உயிர் இருப்பதாக சொன்னார்கள். ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து மனதை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூர்ச்சையாகி கிடந்த மாணவன் காதில் பேச பேச அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு அசைவு தெரிந்தது.
அதைப் பார்த்து அடுத்தடுத்து அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச பேச கண் விழித்தான் நினைவோடு எங்களை அழைத்தான். இப்ப நல்லா இருக்கிறான். அதைப் பார்த்த மருத்துவர் மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார். ஆனாலும் தாய் தந்தைக்கு பிறகு ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் மாணவனின் மனதை படித்தோம் உயிரை பெற்றோம். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்கேன் எடுக்க அவனே நடந்து போய் இருக்கிறான் என்றார் ஆனந்த கண்ணீரோடு.....
வாழ்த்துக்கள் ஆசிரியர்களே..!

Comments

 1. வாழ்த்துக்கள் தெய்வங்களே!

  ReplyDelete
 2. Vazha vaitha Thevangalukku vazhthugal

  ReplyDelete
 3. படித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. We give not only knowledge but also life these two teachers prove it

  ReplyDelete
 5. ஆயுள் கொடுத்த ஆசான்கள்

  ReplyDelete
 6. இருவரின் அரவணைப்பில் இறைவனை காண்கிறேன்!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்... அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றி பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டும்

  ReplyDelete
 8. Super sirs Done a great job
  ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்