அரசியல் கட்சி தொடர்பிருந்தால் நல்லாசிரியர் விருது கிடைக்காது!
இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் விருது தரப்படுகிறது. தமிழக அரசும் தனியாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விதிகளுக்கான அரசாணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்டார். இந்த முறை, வருவாய் மாவட்ட வாரியாகவும், பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையிலும், விருது பிரித்து வழங்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு, 32; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்பு துறை பள்ளிகளுக்கு, தலா, இரண்டு; மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு, மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன.விருதுக்கான பரிசீலனையில், மாவட்டக் குழுவுக்கு, முதன்மை கல்வி அதிகாரியும், மாநிலக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரும் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றலுக்கு, முழுமையாக தங்களை அர்ப்பணித்து பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
போதிய விண்ணப்பம் வராவிட்டாலும், பள்ளிகளில் ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்ட, சிறந்த ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெற்று பரிந்துரைக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆசிரியர்களை, பட்டியலில் சேர்க்கக் கூடாது. அதேபோல், அரசியல் கட்சிகளின் தொடர்புடைய மற்றும் சிபாரிசு பெறும் ஆசிரியர்களையும், விருது பரிந்துரை பட்டியலில் இணைக்கக் கூடாது என, புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளன.
Comments
Post a Comment