ஒரே இடத்தில் 3 வருடம் பணியில் நீடித்தால் டிரான்ஸ்பர் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடத்தில் 3 வருடத்துக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றினால் அவர்களுக்கு கட்டாயமாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரையிலான பதவியில் இருப்பவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது அரிதாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், மேற்கண்ட பணியாளர்கள் ஒரே அலுவலகத்தில் 3 வருடத்துக்கு மேல் பணியாற்றினால் அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி(பணியாளர் தொகுதி) தனது செயல்முறைகள் குறித்து தெரிவித்துள்ளதாவது:
கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்கள் நிர்வாக நலனுக்காக சீரமைக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டும் என்ற வகையில் ஆகஸ்ட் 1ம் தேதி கணக்கின்படி கல்வித்துறை பணியாளர்கள் 3 வருடத்துக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும்பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்யலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த காரணங்களுக்காக இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை உள்ள பணியாளர்களுக்கு 4ம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி மாறுதல் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதன்படி,
* ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளவாறு தற்போதுள்ள பதவியில் ஒரு இடத்தில் 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களை தங்கள் மாவட்டத்துக்குள் கவுன்சலிங் நடத்தி மாறுதல் வழங்கலாம்.
* தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும்.
* 3ஆண்டுக்கு மேல் பள்ளிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது.
* ஒரு அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யக்கூடாது. அதை மாறுதலாக கருத இயலாது.
* மாவட்ட கல்வி அலுவலகம் புதியதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டு இருந்தால் அந்த அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. எனினும் நிர்வாக காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல்கேட்டால் அவர்களையும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
* 3 வருடத்துக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் பணியாளர்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் தீவிர உடல் நலிவுற்றவர்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தி கவுன்சலிங்கில் முன்னுரிமை அளித்து தக்க ஆணை வழங்கலாம்.
* தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோர் அனைவரும் வேறு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 3ஆண்டுக்கு மேல் பணியாற்றும் யாருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்க கூடாது.
மேற்கண்ட விதிகளை கடைபிடித்து 4ம் தேதி கவுன்சலிங் நடத்தி முடித்து தங்கள் மாவட்டத்தில் உள்ள காலி பணியிட விவரங்களை பதவி வாரியாக தனித்தனியாக 6ம் தேதி இணை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.
Comments
Post a Comment