ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என எதிர்பார்த்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏமாற்றம்

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு 1-1-2016 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், 21 மாதம்  நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது.


இந்நிலையில், 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 

இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் தலைமையில் விசாரணை நடத்தி  ஜூலை 31ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று கடந்த பிப்ரவரி 21ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.


சித்திக் தலைமையில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கொடுத்த பரிந்துரைகளை ஆய்வு செய்து, இறுதி அறிக்கையை ஜூலை 31ம் தேதி (நேற்று முன்தினம்) முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிப்பார் என்று அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு சித்திக் கடிதம் எழுதியுள்ளார். 

அரசும் அவருக்கு மேலும் 3 மாதம் கால நீட்டிப்பு அளிக்கும் என்றே கூறப்படுகிறது.இந்நிலையில், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை சித்திக் நேற்று அழைத்து பேசியுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Comments