குரூப்2 தேர்வு அறிவிப்பு 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்

 “குரூப் 4 பதவியில் 9351 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில்  14.26 லட்சம் பேர் தகுதி ெபற்றுள்ளனர். குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: குரூப் 4 பதவிக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட்  www.tnpsc.gov.in. http://results.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் 14 லட்சத்து 26 ஆயிரம் 10 பேர் தகுதி ெபற்றுள்ளனர். 

இதில் ஆண்கள் 6,28,443 பேர்,  பெண்கள் 7,97,532 பேர், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை சேர்த்து நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் அதிகப்படியானோர் பங்கேற்றனர். எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் எழுதியதாக சரித்திரம் இல்லை. இத்தேர்வில் தகுதியானவர்களில் சுமார் 33,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்படுவர். 

அதாவது, 1:3 என்ற அடிப்படையில்  அழைக்கப்படுவார்கள். அவர்களின் விவரம் இன்னும் 3 நாட்களில் தேர்வாணையம் வலைதளம், எஸ்.எம்.எஸ்., இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும். 

சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வர வேண்டாம். அதற்கு பதிலாக அரசின் இசேவை மையங்களுக்கு சென்று தங்களுடைய சான்றிதழை வருகிற 16ம் தேதி முதல் தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 30ம் தேதி சான்றிதழை பதிவேற்றம் செய்ய கடைசி நாள். 

அதைத் தொடர்ந்து அந்த  சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு அக்டோபர் கடைசி வாரத்தில் கவுன்சலிங் தொடங்கும். கவுன்சலிங்கிற்கு 200 பேர் அழைக்கப்படுவார்கள். குரூப் 4 தேர்வு அறிவிக்கும்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9,351 என்று அறிவிக்கப்பட்டது. 

தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 11,280 ஆக உயர்ந்துள்ளது. வி.ஏ.ஓ. எண்ணிக்கை 494லிருந்து 1,107 ஆக அதிகரித்துள்ளது. இளநிலை உதவியாளர் (பிணையம்) 226, இளநிலை உதவியாளர் (பிணையற்றது)-4722, வரித்தண்டலர்- 52, தட்டச்சர்- 3974, சுருக்கெழுத்து தட்டச்சர்- 931, நில அளவர்- 102, வரைவாளர்- 156 ஆகவும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஓராண்டுக்கான கால அட்டவணையில் அறிவித்தப்படி 9 தேர்வுகள் நடத்துவதில் காலதாதமதம் ஏற்பட்டுள்ளது. 

இதற்காக வருந்துகிறோம். இதனை 2, 3 மாதத்தில் சரி செய்து விடுவோம். கணினி வழி மூலமாக இதுவரை 27 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு குழப்பமோ, குந்தகமோ ஏற்படவில்லை. தேர்வர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வரவில்லை. 

கணினி வழியாக குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த வசதி உள்ளது. கணினி மூலம் தேர்வுகள் நடத்தினால் விரைவில் தேர்வுகளை வெளியிட முடியும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

2017ம் ஆண்டு நடந்த குரூப் 1 முதன்மை தேர்வில் எந்தவித  முறைகேடும் நடைபெறவில்லை. முதன்மை தேர்வுக்கான விடைகள் திருத்தும் பணி  நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.  அதாவது, தேர்வாணையம் ஓராண்டு கால அட்டவணையில் அறிவித்தபடி செப்டம்பர்  8க்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றாக நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு தனித்தனியாகத்தான் தேர்வுகளை நடத்தி வந்தது. இதனால், அதிக செலவு ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி கூறி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை ஒன்றாக டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இதனால், அரசுக்கு 12 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
2016ல் நடந்த குரூப் 1 தேர்வு  முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில்  சம்பந்தப்பட்ட தேர்வாணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போலீசார் நடத்தும் விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி முழு ஒத்துழைப்பு கொடுத்து  வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments