பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் முதல் சுற்று கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியது.



தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வுப் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 1,06,105 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

கலந்தாய்வு அட்டவணை: கலந்தாய்வுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டிய தேதி, கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டிய தேதிகள், தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை இறுதியாக உறுதி செய்யும் தேதி, தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய தேதி ஆகியவை அண்ணா பல்கைலக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 8,000 மாணவர்கள்: கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்புள்ள 10,000 மாணவர்களில், 8,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
நள்ளிரவு முதல் கல்லூரி தேர்வு: பிளஸ் 2 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-இல் தொடங்கி, 200-க்கு 190 வரை எடுத்து முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை ஆன்லைனில் தேர்வு செய்யத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஜூலை 27) மாலை 5 மணி வரை தேர்வு செய்யலாம்.
உதவி மையங்களிலும்...இணையதள வசதியுடன் கணினி இல்லாத மாணவர்கள், புதன்கிழமை (ஜூலை 25) முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொறியியல் கல்லூரிகள், பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம்.
தொடர்ந்து தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை ஜூலை 28, 29 தேதிகளில் தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரியை ஜூலை 30-இல் இறுதி செய்தல், தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்கு ஆக. 3-ஆம் தேதிக்குள் சென்று சேருதல் ஆகியவை முதல் சுற்று கலந்தாய்வு நடைமுறைகள்.
கவனமாகத் தேர்வு செய்வது நல்லது: ஆன்லைன் மூலம் அல்லது உதவி மையங்களுக்குச் சென்று பொறியியல் கல்லூரி, பாடப் பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்கள் அதிக பொறியியல் கல்லூரிகளையும், பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்வது நல்லது. இவ்வாறு தேர்வு செய்யும்போது, தங்களது தேர்வுக்கான வரிசைப்படுத்துதலில் உரிய கவனத்தைச் செலுத்துவது அவசியம்'' என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
2-ஆவது சுற்று முன்வைப்புத் தொகை: இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ள 20,000 மாணவர்கள் புதன்கிழமை (ஜூலை 25) முதல் முன்வைப்புத் தொகையை வரும் 29-ஆம் தேதி வரை செலுத்தலாம். கட்-ஆஃப் மதிப்பெண் 190-க்குக் கீழ் 175 வரை உள்ள மாணவர்களுக்கு, பி.இ. ஆன்லைன் இரண்டாவது சுற்று கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!