அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 1, 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, உடுமலையில் நேற்று நடந்தது.இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:தமிழகத்தில், மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டம், சர்வதேச அளவில், பல மாநிலங்களையும் கவனிக்கச்செய்துள்ளது.

அரசுப்பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு தோறும், இவற்றை பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளிலிருந்து, ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆகஸ்ட் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, செப்., வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் சேர்க்கப்படும் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்கவும், அங்கன்வாடியில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளில், செயல்பாடில்லாமல் உள்ள பெற்றோர் - ஆசிரியர் கழகங்களை, ஆய்வு செய்து மாற்ற வேண்டும்.சமூக சேவை மனப்பான்மையுள்ள, பள்ளியின் தரத்தை உயர்த்துவதில் ஆர்வமுள்ளவர்களை மட்டுமே, பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேல்நிலை வகுப்புகளுக்கு ஐ.சி.டி., எனப்படும் ஒருங்கிணைந்த கல்வி வழங்குவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆங்கிலத்திறனை வளர்ப்பதற்கு, தனி வகுப்பறை அமைக்கும் திட்டமும் உள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 12 முதல் சி.ஏ., பயிற்சிகள் துவங்குகின்றன. முதல் கட்டமாக, 2,000 மாணவர்களுக்கும், கல்வியாண்டுக்குள், 20 ஆயிரம் பேருக்கும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

Comments