சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது
உள்பட தனியார் பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.



 இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
 தனியார் பள்ளிகளில் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத் திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 விடைத்தாள் மதிப்பீடு: அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவும் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அதனுடைய கட்டடங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். அரசின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகள், விடைத்தாள்கள் மதிப்பீடு போன்ற பணிகளுக்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்பிட வேண்டும்.
 அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி ஆகியன மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை அதில் ஈடுபடுத்த அனுப்பிட வேண்டும்.
 கட்டணத்தை முறைப்படுத்த...தனியார் பள்ளிக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்டணத்தை பெறக் கூடாது.
 சரியாகப் படிக்காதவர்கள்: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரையும் சரியாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி பொதுத் தேர்வுகள் எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குள் நலன்களைக் கெடுக்கும் வகையிலான போட்டிகளை நடத்தக் கூடாது.
 வெளிப்படையான சேர்க்கை: தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வி ஆண்டின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை, பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலோ அல்லது தகவல்களைத் தெரிவிக்கும் பள்ளி தொடர்பான பிற அம்சங்களின் வாயிலாகவோ வெளியிட வேண்டும்.
 பெற்றோர்-ஆசிரியர் சங்கம்: அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்தவும், அதில் பெற்றோரை பங்கெடுக்கச் செய்யவும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும்.
 அனுமதி பெறாமல் மூடக் கூடாது: தனியார் பள்ளியையோ அல்லது பள்ளியில் தொடங்கப்படும் பாடப் பிரிவையோ உரிய அரசு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமல் மூடக் கூடாது. அவ்வாறு மூடும் போது படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
 ஆசிரியர்களுடன் ஒப்பந்தம்: தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக் குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தம் செய்யலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன், பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் சட்டம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தத்தைச் செய்து செயல்படுத்திட வேண்டும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தங்கம் தென்னரசு கேள்வி: இந்த மசோதா தொடர்பான விவாதம் வியாழக்கிழமையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவில் உள்ள அம்சங்களை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்களாக மாறி வருகின்றன. அதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பினார்.
 இதற்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகள் ஒருமுறை மட்டுமே தடையின்மைச் சான்றிதழ் பெற்றால் போதும் என இருந்தது. இப்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
 விடுமுறை நாள்களில்: தனியார் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி நாள்களில் பயிற்சி அளித்தால் அவர்களுக்கான உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்