தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க குழுக்கள்

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 4 நகராட்சி தொடக்கப்பள்ளிகள் என 33 பள்ளிகளில் ஒருவர் கூடப் படிக்கவில்லை என்பதும் அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர். பல பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் உள்ளதும் அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடி அம்மாணவர்களை அருகே உள்ள பள்ளிகளில் இணைக்க அரசு முடிவு செய்தது. மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளை மூடவோ அல்லது அருகில் உள்ள பள்ளிகளுடனோ இணைக்கக் கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விழிப்புணர்வுப் பிரசாரத்தை தீவிரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம், சைக்கிள், செல்லிடப்பேசி, சுற்றுலா என பல சலுகைகளை அறிவித்து தீவிர மாணவர் சேர்க்கையில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பெற்றோருக்கு ஆங்கிலக் கல்வி மீதான ஈர்ப்பு வெகுவாக அதிகரித்திருப்பதால் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையிலும் கூட தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.
இருப்பினும் அரசின் சலுகைகள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களைச் சேர்த்து வருகிறோம்.
தற்போது மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பெற்றோரை கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் வீடு, வீடாகச் சென்று சந்தித்து வருகின்றனர். அப்போது பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவர் கூட இல்லாத சில பள்ளிகளில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். எந்தவொரு பள்ளியையும் மூடக்கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியாக உள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் அனைத்து கிராமங்கள், நகர்ப்புறங்களில் அது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரைஅவகாசம் இருப்பதால் 890 பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்

Comments