ஆசிரியர்கள் போட்டி தேர்வெழுத சி.இ.ஓ.,க்கள் அனுமதி தரலாம்

சென்னை, 'அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், உயர்கல்வி படிப்பது, வெளிநாடு செல்வது, சொத்துகள் வாங்குவது, அரசின் பிற துறைகளின் வேலைக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு, நியமன அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.இதன்படி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்து, அனுமதி பெற்று வந்தனர். பள்ளிக்கல்வி துறையில், தற்போது நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டதால், சி.இ.ஓ.க்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.எனவே, உயர்கல்வி படிப்பதற்கான அனுமதி பெறுவது, போட்டி தேர்வுகளில் பங்கேற்க அனுமதி பெறுவதற்கு, ஆசிரியர்களின் கோப்புக்களை, சி.இ.ஓ.,க்களே ஆய்வு செய்து, விதிப்படி அனுமதி வழங்கலாம் என, பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Comments