பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருது விதி திருத்தம் : குறுக்கீடு இருக்கக்கூடாது


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் பள்ளிக் கல்வித்துறை திருத்தம் செய்துள்ளது. மேலும், கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் விண்ணப்பம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் பள்ளி ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அது போல தேசிய நல்லாசிரியர் விருதுகள் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் ஆண்டுதோறும்  350 பேருக்கு  நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும்.  விருது பெற விரும்புவோர் பட்டியல் மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான  விருதுக்கு விண்ணப்பிக்கும் முறையிலும், விதிகளிலும் பள்ளிக் கல்வித்துறை சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களே நேரடியாக அனுப்ப வேண்டும். 

மேலும், ஆசிரியர் பணியில் தாங்கள் செய்த சாதனை, கற்றல் கற்பித்தல் பணியில் செய்துள்ள அணுகு முறைகள், எழுதிய நூல்கள் போன்றவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். வெறும் அனுபவத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய திறமை, ஒழுக்க நடைமுறைகள் போன்றவற்றை பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது. 

அத்துடன், இந்த ஆண்டுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆன்லைன் விண்ணப்பங்கள் வருவதும் குறைந்துள்ளது. ஆசிரியர் தினம் கொண்டாட இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் விண்ணப்பங்கள் வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இதுதவிர விருது பெறுவோருக்கு ஆதரவாக உள்ளூர் பிரமுகர், அரசியல் பிரமுகர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களின் பரிந்துரைகளுக்கு இடம் கொடுக்காமல் விருதுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் ஆசிரியர்கள் ஒருபுறம் கலக்கத்தில் உள்ளனர். மேலும், விண்ணப்ப பரிசீலனையில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் போன்றவர்களின் தலையீடு இல்லாமல் பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் கவனமாக பட்டியல் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. ஆன்லைன் விண்ணப்பங்களில் தவறுகள், சந்தேகம் இருந்தால் அவை உடனடியாக நீக்கம் செய்யப்பட்டு  வருகின்றன.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்