தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்துக்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்ப வினியோகம்தாமதம் ஆகியுள்ளது. விருது வழங்குவதற்கான விதிகள், பெரிய அளவில் மாற்றப்படுவதாகவும், அதனால் தான், விண்ணப்ப அறிவிப்பு தாமதம் ஆவதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன.ஏற்கனவே, தேசிய அளவில் ஆசிரியர் விருதுக்கு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், நேரடியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தனியாக,'கனவு ஆசிரியர் விருது' அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நல்லாசிரியர் விருதை, பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெறும் அனுபவத்துக்கு மட்டுமே
முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய விதம், ஒழுக்க நடைமுறைகள், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய விதம் போன்றவற்றையும், ஆய்வு செய்ய உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், தகுதி அடிப்படையில், விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை புகுத்துவதுடன், விண்ணப்ப பரிசீலனையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி, பட்டியல் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Comments
Post a Comment