கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.

இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க, ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். 

ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டியுள்ளது.பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்