245 புதிய மாணவர்களை சேர்த்து அசத்தும் அரசு தொடக்கப்பள்ளி - அப்படி என்னதான் செய்தார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள்?
அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் விரும்புவதில்லை என்று ஒருபக்கம் குறையாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும், ஓர் அரசுப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 250 யைத் தொடவிருக்கிறது. அதுவும் ஒரு தொடக்கப்பள்ளியில்.
இந்த முரண்பாடு ஆச்சர்யத்தை அளிக்கிறது அல்லவா! அசாத்தியமான மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர் மணிகண்ட பிரபுவிடம் பேசினேன்.
``திருப்பூரின் புறநகர்ப் பகுதியான பூலுவபட்டியில் எங்கள் பள்ளி உள்ளது.
நீங்கள் சொல்வதைப் போலதான் இந்தப் பகுதி மக்களும் தனியார் பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டிவந்தனர். இதை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
தனியார் பள்ளியில் எவையெல்லாம் எதிர்பார்த்து செல்கின்றனரோ அவற்றை நம் பள்ளியில் கொண்டுவந்துவிடலாம் என முடிவெடுத்தோம்.
பள்ளியின் தரைப்பரப்புக்குக் கிரானைட் போடுவதற்கு, ஆசிரியர்கள் குறிப்பிட்ட தொகையை அளித்தனர்.
மீதத் தொகையை நன்கொடை மூலம் திரட்டினோம். ஏழரை லட்சம் ரூபாய் செலவழித்து அழகான தரைகொண்ட வகுப்பறைகளை உருவாக்கினோம்.
பிறகு, ஒரு தன்னார்வ நிறுவனம் எங்கள் பள்ளியோடு கைகோக்க விரும்பியது.
அதன்மூலம் 17 கம்ப்யூட்டர்களும் 5 ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களும் உருவாக்கினோம்.
கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ஆசிரியர் ஒருவரை அந்நிறுவனமே நியமித்து உதவியது. இதையெல்லாம் மக்கள் உணர வேண்டுமே.
உடனே தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலாவின் அனுமதியோடு பள்ளியின் புது மாற்றங்களைப் பட்டியலிட்டு ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தோம்.
அதைப் பார்த்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பார்த்துச்சென்றனர்.
நாங்கள் அழைக்காமலேயே பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க முன்வந்தார்கள் பெற்றோர்கள்.
சென்ற ஆண்டில் 245 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்தார்கள்.
இந்த எண்ணிக்கை நாங்கள் நினைத்ததை விடவும் அதிகம்.
அதனால், இன்னும் புதிய விஷயங்களைச் சேர்க்க முடிவெடுத்தோம்.
சிலம்பம், அபாகஸ், பரதம், செஸ், கராத்தே, பறை இசை எனச் சிறப்பு வகுப்புகள் மூலம் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்திவருகிறோம்.
பெற்றோர்களின் மொபைல் எண்ணுக்கு மாணவர்கள் பற்றிய தகவல்களை எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்துகிறோம்.
மாதந்தோறும் கதை சொல்லும் நிகழ்ச்சியைத் தவறாமல் நடத்துகிறோம்.
கோவை சதாசிவம் எனும் கதை சொல்லி, பறவைகள், விலங்குகள் என இயற்கையில் நாம் பார்க்கத் தவறிய விஷயங்களைப் பற்றிக் கதையாக, பாட்டாகச் சொல்லிகொடுக்கிறார்.
அறிவியல் விழிப்பு உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்துகிறோம்.
திருப்பூர் புத்தகக் கண்காட்சி அறிவிப்பைப் பார்த்தவுடனே எங்கள் பள்ளி மாணவர்கள் `எப்போ சார், போவோம்?' எனக் கேட்டு நச்சரிப்பார்கள். எந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு எங்கள் மாணவர்களோடு செல்ல தவறியதே இல்லை.
மாணவர்களுக்கு ஐ.டி கார்டு, பெல்ட் உள்ளிட்டவற்றை வழங்குவதோடு, விளையாட்டுக்கு எனத் தனி சீருடையை வடிவமைத்திருக்கிறோம்.
ஒவ்வொரு புதன் கிழமையும் அந்தச் சீருடைதான். பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்க, தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆள்களை நியமித்திருக்கிறோம். இப்படிச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
ஒன்றை மறந்துவிட்டேனே! ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மல்டி கலரில் காலண்டர், டைரி தருகிறோம். இதற்கான செலவுகள் அனைத்தும் ஆசிரியர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
அந்தளவுக்கு ஒவ்வொரு முயற்சிக்கும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள்.
இந்த ஆண்டில் இப்போது வரை 230 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இவர்களில் பலர் சென்ற ஆண்டு தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்.
மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் அதிகரித்திருக்கிறோம்.
கிராமப் புற மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு தங்கள் பிள்ளைகளை இத்தகைய பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று நம்பிக்கையோடு பேசினார் ஆசிரியர் மணிகண்ட பிரபு.
மற்ற அரசுப் பள்ளிக்கு
பெரும்உதாரணமாகத் திகழ்ந்துவருகிறது பூலுவபட்டி பள்ளி.
Congratulations for all staff
ReplyDeleteGood effort...enga urla ethai implement panna nalla irrukum...
ReplyDelete