TET 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விரைவில் மாற்றம்

சட்டசபையில், நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டி, தி.மு.க.,வினர் கொண்டு வந்த, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நடந்த விவாதம்:



தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகத்தில், லட்சக்கணக்கான பட்டதாரிகள், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், 2014க்கு பின், பட்ட தாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2013ல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 43 ஆயிரத்து, 112 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 11 ஆயிரத்து, 369 பேருக்குமட்டும், வேலை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த, 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, இன்னமும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, அவர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியில் சேர முடியாத நிலை உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை கைவிட வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: சான்றிதழ் வழங்கும் பணி, விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. 2013ல், இடைநிலை ஆசிரியர்கள், 42 ஆயிரத்து, 724 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 13 ஆயிரத்து, 781 பேர், ஆசிரியர் பணியிடங்கள் பெற்றனர். மீதம் உள்ளவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் அவகாசம் உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை பொறுத்தவரை, 52 ஆயிரத்து, 646 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 20 ஆயிரத்து, 275 பேர், பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதம் இருப்பவர்களுக்கு, தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அனைவருக்கும் வேலை அளிப்பது, அரசு கடமையல்ல.சிறப்பாசிரியர்களுக்கு, தேர்வு முடிவுகளை வெளியிட, அரசு தயாராக உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, அரசு ஆய்வில் உள்ளது.

விரைவில், நல்ல முடிவு மேற்கொள்ளப்படும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிற நிலையில், அவர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், மீண்டும் தேர்வு எழுதுவது பற்றி, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது

Comments