அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க CEO தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடி விடுப்பு எடுக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 2018 - 2019ஆவது கல்வியாண்டின் முதல் இடைப் பருவத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற வேண்டும் என்று கல்வித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கான பல்வேறு முயற்சிகளில் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது.

முதல்கட்டமாக பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களை விடுப்பு எடுக்காமல் தினமும் பள்ளிக்கு வரவழைக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பெற்றோர் - ஆசிரியர் கழகம், மாணவர் நன்னடத்தைக் குழு ஆகியவை மூலம் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மாணவர்கள் விடுப்புக் கடிதம் அளித்து தலைமை ஆசிரியர் அனுமதியுடன் விடுப்பு எடுக்க வேண்டும்.


இதையும் மீறி அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்திலும், வகுப்பாசிரியர்கள் மூலமும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

தேவையான நேரத்தில் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கையை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைத்து மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும் முழு ஒத்துழைப்பு அளித்து தேர்ச்சி இலக்கை அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்