ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்

கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது. 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்கள், இடம் பெற்ற பள்ளிகள் விவரம் குறித்த எல்லை வரையறைக்கான அரசு உத்தரவும் வெளியாகவில்லை.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: 


புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மாவட்ட, உதவி கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலருக்கான சம்பளம் வழங்கப்படும். வரையறை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார்.

Comments