ரம்ஜான் விடுமுறை அறிவிப்பில் குழப்பம் பள்ளிக்கு வந்து திரும்பிச்சென்ற மாணவர்கள்: உள்ளூர் விடுமுறையாக மாற்றம்

தமிழகத்தில் ரம்ஜான் விடுமுறை அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால், மாணவர்களும், ெபற்றோரும் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. 

அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு இன்று (வெள்ளி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமியர்கள் தீவிரமாக செய்து வந்தனர். இதனையடுத்து தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று மாலை, ரம்ஜான் பண்டிக்கைக்கான பிறை தெரியவில்லை. இதனையடுத்து, நாளை (சனி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி சலா ஹீத்தீன் முஹம்மத் அய்யூப் தெரிவித்தார். இதனால், தமிழக அரசு தெரிவித்த இன்றைய தின விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும் நாளை பொதுவிடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.


விடுமுறை குறித்த இருவேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், பள்ளிகள் உள்ளதா, விடுமுறையா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனால், பெரும்பாலான மாணவர்கள், இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்தனர். ஒருசில பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. 

விடுமுறை விடப்பட்ட பள்ளிகளில், இன்றைக்கு உள்ளூர் விடுமுறையாக மாற்றப்பட்டு, இதனை ஈடுசெய்ய வேறு ஒருநாளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

Comments