பணிநிரவல் – ஒரு பார்வை
ஆசிரியர் மத்தியில் எங்கு, எப்பொழுது, யாரைப் பார்த்தாலும் பணிநிரவல் பற்றியே பேச்சு!
இதற்கு யார் யார் காரணம்? ஏன் இது நிகழ்ந்தது? எப்படி இது நிகழ்ந்தது? . . . என பல வகையில் அலசி, கருத்து பறிமாறி எல்லோரும் அலுத்துவிட்டார்கள்.
அவரவர் பார்வையில் அவரவர் சார்ந்த கருத்து உயர்வானது! யாரும் யாரையும் குறை கூற முடியாது. எது நடக்க உள்ளது என்றும், எது நடக்கக்கூடாது என்றும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது தலைமையாசிரியரும் அவ்வப்போது கருத்தாடல் செய்வோமோ அது இப்பொழுது நடந்துகொண்டு உள்ளது. ஆம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைவு. அதிக ஆசிரியர் எண்ணிக்கை - உபரி ஆசிரியர் பணியிடங்கள். அதன் தொடர்ச்சியாக பணிநிரவல்.
இனிவரும் காலங்களில் பணிநிரவலை இல்லாமலாக்குவது நம் கையிலும், அரசு மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது. ஆசிரியர்களாகிய நாம் கல்வி கற்பிக்க எப்பொழுதும் தயாராக உள்ளோம். மாணவர் எண்ணிக்கை சரியாமல் பாதுகாப்பது அரசு மற்றும் பொதுமக்கள் கடமை.
தனியார் பள்ளிகளில் சேரும் 25% மாணவ, மாணவிகளுக்கு அரசு கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவினை மறுபரிசீலிக்க வேண்டும். அரசு வழங்கும் கடணத்தைப் போல் மேலும் சில மடங்கு தொடர் செலவு உள்ளது என்பது பெற்றோர்களுக்கு புரிவதில்லை, அறிய விடுவதுமில்லை. இச்சலுகையில் தனியார் பள்ளிகளில் தன் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர் நிலமை புலிவால் பிடித்த கதைதான். கல்விக்கான செலவு ஒவ்வொரு பெற்றோருக்கும் சவால் விடும் வகையிலும், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும், அச்சமூட்டும் வகையிலும் உயந்துள்ளது. சமூக மற்றும் உறவினர் மூலம் ஏற்படும் மன அழுத்தத்தால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் பொறுப்பு இச்சமயத்தில் மிகவும் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன என்றால் அவற்றைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் சீர் செய்து செவ்வனே வழிநடத்துவது கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள், கருத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மக்கள்நலம் விரும்பிகள்.... ஆகியோரின் கடமை. எரிகொள்ளிக்கு பயந்து, எண்ணெய் சட்டியில் விழுந்த கதையாக பெற்றோர் தவிக்கின்றனர்.
கூடிய விரைவில் பெற்றோர்கள், கல்வியலாளர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் அரசு இணைந்து இதற்கு ஒரு சுபமான முற்றுப்புள்ளி வைக்க வெண்டும். இல்லையெனில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.
தனியார் பள்ளிகளின் ஈர்ப்புக்குக் காரணங்கள் பல. மழலையர் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர். பகட்டான முன்புறத்தோற்றம். பாட இணைசெயல்பாடுகள் (co-curricular and extra-curricular activities) குறித்த விளம்பரம். . . . தனியார் பள்ளிகளில் உள்ள சிறப்புகள் பல அரசுப் பள்ளிகளில் உள்ளன. அரசுப்பள்ளிகளில் உள்ள சில குறைகள் தனியார் பள்ளிகளில் உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள நிறைகளும், அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளும் சிலரால் நன்கு திட்டமிட்டு பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
Coin has two sides. தனியார் பள்ளிகளின் ஒரு பக்கமும், அரசுப் பள்ளிகளின் ஒரு பக்கமும் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் மற்றொரு பக்கமும், அரசுப் பள்ளிகளின் மற்றொரு பக்கமும் பலருக்குத் தெரிவதில்லை; தெரியவிடுவதுமில்லை. இதுவே தனியார் பள்ளிகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு.
சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்றமுடியாது. தூங்க வைக்கப்பட்டிருப்பொரெல்லாம் விழித்துக்கொண்டால் எல்லா மாயையும் விலகிவிடும். நம்புவோம்! நம்பிக்கைதான் வாழ்க்கை! இதைத்தானே மாணவரிடத்தில் விதைக்கின்றோம். எதிர்கால ஆசிரியர், மாணவர் மற்றும் சமூக நலனுக்காக சிந்திப்போம்!
பணிநிரவலை எவ்வாறு எதிகொள்வது? – ஓர் ஆலோசனை.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களை அனுப்ப மாற்றுப் பள்ளி தேடுவதைவிட அவர்களுக்கு அப்பள்ளிக்கு உரிய வகையில் அவர்தம் பணியை பின்வருமாறு மாற்றியமைக்கலாம்.
மிக உயர்வான பாடத்திட்டத்தில், அதிசிறப்பான வகையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயன்படுத்திட ஒரு தொழில்நுட்ப ஆசிரியராக (Techno Teachers) அவர்களைப் பரிணமிக்கச் செய்யலாம். அவர்களுக்கு சில வாரங்கள் பயிற்சி அளித்து இதை செயல்முறைப்படுத்தலாம். அப்பயிற்சி அவரை பள்ளி சார்ந்த அனைத்து தொழில்நுட்பமும் அறிந்தவராகவும், தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துபவராகவும், அவற்றைச் சீர்படுத்துபவராகவும் உருவாக்க வேண்டும்.
அறிவியலில் கணினி பற்றிய ஒரு பாடம், எல்லா பாடங்களிலும் (QR Codes) குறியீடுகள் மூலம் இணையம் சார்ந்த செயல்பாடுகள், அவற்றை உருவாக்கும் செயல்கள் என பலவகையில் தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் பல தகவல்கள் மேலாண்மை செய்ய வேண்டிய சூழல். இன்னும் பல . . .
விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு உரிய வகையில் பயிற்சி அளித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கலாம். தங்கள் பாடம் சார்ந்த 14 பாடவேளை கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து அனைத்து ஆசிரியர்களையும் Smart Teacher ஆக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல்,
பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், தேர்வு சம்மந்தமான கணினி சார்ந்த அனைத்து செயல்களையும் செய்தல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளை செயல்படுத்துதல், அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல்,
பள்ளிக்கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன படிப்புகள் உள்ளன? அவற்றை எங்கு கற்பது? என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது? குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயல்படுதல், மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்குதல், . . . போன்றவற்றில் ஈடுபடுத்தலாம்.
மேற்கூறிய எல்லா செயல்களையும் இப்போதுள்ள ஆசிரியர்கள் செய்கின்றனர். அதனால் அவர்களின் கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லிமாளாது. இத்தகைய ஆசிரியர்களை உருவாகுவதால் அரசுப்பள்ளியும் பன்முக வளர்ச்சியைப்பெறும். பணிநிரவலும் ஏற்படாது. நல் சமுதாயம் மலரும்.
- சிவ. ரவிகுமார், 9994453649
Comments
Post a Comment