ஆசிரியர்கள் போராட்டம்: சர்ச்சையில் சிக்கிய பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்
உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர்.
சென்னை: ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இரவு முதல் அதிகாலை வரை கவுன்சலிங் நடந்ததால் ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் கடந்த 13ம் தேதி தொடங்கியது.
கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்னதாக பணி நிரவல் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய கவுன்சலிங் இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடிந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உபரி ஆசிரியர் பணியிடங்கள் தவறாக கணக்கிட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நேற்று நடக்க இருந்த கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது. இதுனால், நேற்று காலை கவுன்சலிங்குக்கு வந்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
கவுன்சலிங் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பதால் காலையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வந்துவிட்டனர். ஆனால் கல்வி அதிகாரிகளின் தவறான கணக்கீடுகளால் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்குத்தான் கவுன்சலிங் தொடங்கியது. காலை 3.30 மணிக்கு முடிந்தது. இதுபோன்ற கவுன்சலிங்கை வாழ்நாளில் பார்த்ததே இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை என எல்லா மாவட்டங்களிலும் இதுபோல நடந்துள்ளது.
மேலும் திருச்சி முதல் சென்னை வரை உள்ள பணியிடங்கள் காட்டவில்லை. பணி நிரவல் ஆணைக்கு எதிராக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை வைத்து கவுன்சலிங் நடத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறு. பலமுறை கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தவறான செயல்முறை மூலம் கவுன்சலிங் நடத்துவதால் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாணை எண்266ல் பணி நிரவல் செய்யும் போது பாடவாரியாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முதலில் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டும். ஆனால் கல்வி அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல பாட ஆசிரியர்களை எடுக்கின்றனர்.
மேலும், 9, 10ம் வகுப்புகளுக்கு 5 ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையில் கூறப்பட்டுள்ளது. அந்த விதி பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான விதிகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். ஆணைப்படி பாட வாரியாக எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மேலும் உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர். தவறான கணக்கின்படி பணி நிரவல் செய்ததால் இப்போது காலிப் பணியிடங்களே இல்லை. அதனால் இன்று நடக்கவேண்டிய, மாவட்டத்துக்குள் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற கவுன்சலிங் ரத்தாகிவிட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
Comments
Post a Comment