அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம்: பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடக்கம்
போட்டித் தேர்வுகள், தமிழ் ஆர்வலர்களுக்கான சிறப்பு நூலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு நூலகத்தில் பொருளாதாரம், வரலாறு, அறிவியல், மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டடத்தின் தரைதளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நூலகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவன அதிகாரிகள் கூறியது: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அவை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
350-க்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்கள்: மேல் நாட்டு அரசியல் கோட்பாடுகள்' (பா.சூரியநாராயணன்), ஆங்கில பாராளுமன்றம்' (வீ.கண்ணையா), தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி' (ஜி.எஸ்.அனந்தநாராயணன்), உள நலவியல்' (தா.ஏ.சண்முகம்), தமிழ்ப் பாடஞ் சொல்லும் முறை (பா.பொன்னப்பன்), அடிப்படை பௌதீகம்' (ஜே.ஆரியர்), இந்து சமயத் தத்துவம்' (டி.எம்.பி.மகாதேவன்), கல்வியில் அளவிடுதலும் மதிப்பிடுதலும்' (எம்.ஆர்.சந்தானம்), மானிடவியல்' (ம.சு.கோபாலகிருஷ்ணன்) உள்பட 35 துறைகள் சார்ந்த 350-க்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்கள் இங்கு மட்டுமே பார்க்க
முடியும். இது தவிர ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்கள், பொது அறிவு சார்ந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், அறிவியல்-அரசியல் தொடர்பான விஷயங்களைத் தமிழில் படிக்க விரும்பும் வாசகர்களுக்கும் இந்த நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
படிக்கலாம்-குறிப்புகள் எடுக்கலாம்: திறக்கப்பட்டு சில நாள்களே ஆகியுள்ளதால் தற்போது தினமும் 25 முதல் 30 பேர் வரை வந்து செல்கின்றனர்.
பள்ளிக் கல்வி வளாகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், சிபிஐ இயக்குநரகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் அமைந்திருப்பதால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இங்குள்ள நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இங்கேயே அமர்ந்து படிக்கலாம்; குறிப்புகள் எடுத்துச் செல்லலாம் என்றனர்
Comments
Post a Comment