சாதிக்க துடிக்கும் ஏழை மாணவன்:-"சிங்கப்பூருக்கு அனுப்புங்கள்; இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன்"

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக யோகா போட்டி மற்றும் யோகா மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை மாவட்டம், சந்தையூர் அரசுப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவன் பி.வீரபாண்டி தேர்வாகியுள்ளார்.

 இதனால் பல்வேறு நபர்களும் வீரபாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு யோகா போட்டிகளில் முதலிடம் வென்றுள்ள வீரபாண்டி, புதிய உலகச் சாதனை செய்யும் முயற்சியாக பாண்டிச்சேரியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆணிப் படுக்கையில் 100 ஆசனங்களை வெறும் 30 நிமிடங்களுக்குள் செய்து காட்டி அசத்தியவர்.
தேசிய அளவில் புதுச்சேரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் ருத்ர சாந்தி யோகாலயமும் இணைந்து நடத்திய போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று பன்னாட்டளவில் சிங்கப்பூரில் ஜூலை 4, 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறும் யோகா போட்டிக்குத் தேர்வாகியுள்ள இம்மாணவன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

``நான் 8 வயது முதல் யோகா பயற்சியில் ஈடுபட்டு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றுவருகிறேன். மாவட்ட அளவிலான ஆசனப்போட்டியில் 15 ஆசனங்கள் செய்து முதலிடம் பெற்றேன்.
 2017ல் மாநில அளவிலான ஆசனப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றேன்.
 அதேபோன்று திருச்சியில் நடைபெற்ற யோகா மாரத்தான் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளேன். இந்தாண்டு பாண்டிச்சேரியில் நடைபெற்ற போட்டியில் 2 இடம் பெற்றேன்.

 அதற்காக தற்போது சிங்கப்பூரில் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு கிடைக்க எனது பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மிகவும் முயற்சி செய்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால், வெளிநாடு செல்லும் அளவுக்கு தொகையைத் திரட்டுவதுக்கு எனது பெற்றொருக்கு வாய்ப்பில்லை.
 சிங்கப்பூரில் நடைபெறும் யோகாசனப் போட்டியில், நான் முதலிடம் பெற்று இந்திய நாட்டுக்குப் பெருமை தேடித்தருவேன் என்று நம்பிக்கையோடு உள்ளேன்.
ஆகையால் மத்திய, மாநில அரசுகளோ, தனிநபர்களோ எனக்கு  உதவி செய்தால் சிறப்பாக இருக்கும்' என வேண்டுகோள் வைத்தார்

Comments