ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் வழங்க முடியாது!
பள்ளிக் கல்வி துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத காரணத்தால், ஆசிரியர்கள் கேட்கும் இடத்திற்குப் பணி மாறுதல் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள புதுவள்ளியம் பாளையத்தில், ரூ.4½ லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப் பூமி பூஜை இன்று(ஜூன் 9) நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் 500 பட்டய கணக்காயர்கள் மூலம் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிக்க முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைச் சிறந்த கல்வியாளர்களாக்க, ஐ.ஐ.டி. மூலம் பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு தேர்வையும் மாணவர்கள் சந்திக்கலாம்.
ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடைபெறும். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற விரும்புகிறார்கள். ஆதலால் பணி இடமாறுதல் கேட்கின்றனர். தென் மற்றும் வட மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடங்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு மாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் உள்ளனர். அந்தப் பகுதிகளில் காலிப் பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்குப் பணி மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க வர உள்ளனர். இது கல்வித் துறையின் புதிய முயற்சியாகும்" என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment