அவசியமற்ற பணியிடங்கள் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை துவக்கம்
ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ள அரசு, தமிழக அரசு பணியிடங்களில் அவசியமற்றவற்றை கண்டறியும் வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்க விரும்புபவர்கள் வருகிற 30ம் தேதிக்குள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நிதித்துறை பணியாளர் சீரமைப்புக்குழு உறுப்பினர் செயலாளர் மு.க.சித்திக் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு துறைகளின் பணியாளரமைப்பினை மதிப்பீடு செய்து அவசியமற்ற பணியிடங்களை கண்டறிதல், வெளிமுகமை மூலமாகவோ அல்லது ஒப்பந்த பணி அடிப்படையிலோ பணியமர்த்தலுக்கு வழிவகையுள்ள பணியிடங்களை கண்டறிதல் மற்றும் அரசு துறைகள் மற்றும் அரசு முகமைகளின் நிர்வாக செலவின மேலாண்மை குறித்த பிரச்னைகளை ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளித்திட எஸ்.ஆதிசேஷய்யா (ஐஏஎஸ் ஓய்வு), தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழுவினை அரசு அமைத்துள்ளது.
இக்குழு ஆலோசனைகளை பெறத் துவங்கியுள்ளது. பணியாளர் சீரமைப்பு குழுவிற்கான ஆலோசனைகளை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது src_2018@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கோ வருகிற 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த குழு தொடர்பான விவரங்களை www.tn.gov.in/src என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தேவையில்லாத பணியிடம் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இது என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதேபோல தனியாரிடம் ஒப்படைப்பதின் மூலம் தனியார் மயமாக்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment