நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல்

வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும்,


  ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார்.

முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. 7 லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் தொகையையும் வழங்கி வருகிறது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (டிடிஓ), நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம், எண்ம ஒப்பம்மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, தமிழகத்தின் நிதிநிலை விவரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைக்கும். இதன் மூலம் தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 2018 அக்டோபர் மாதத்தோடு, சிடி மூலம் சம்பளப் பட்டியல் வாங்கும் நடைமுறை முடிவுக்கு வரும். கணினி மயமாக்கும் திட்டம் 2018 நவம்பர் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே முதன் முறையாக கருவூலத்துறை முழுமையாக கணினி மயமாக்கப்படுவது தமிழகத்தில்தான் என்றார் அவர்.

Comments