30 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற 30 பெருநகர சென்னைமாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வியாழக்கிழமை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் 70உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாநகராட்சி சார்பில் ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது.ரூ.30 லட்சம் வளர்ச்சி நிதி: அதன்படி, 2017-18 கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற 30 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையார் த.கார்த்திகேயன் கூறுகையில், ' பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களைப் பாராட்டும் வகையில் 30 பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.இந்தத் தொகையில் பள்ளிக்கான தளவாடப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ.50,000-மும், ஆசிரியர்கள் சுற்றுலாசெல்வதற்கு ரூ.20,000-மும், ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15,000-மும், மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளை மேம்படுத்த ரூ.15,000-மும் பயன்படுத்தப்படும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments