TET தேர்வில் தேற ஓராண்டு அவகாசம்...! - சட்டமன்ற கூட்டத் தொடரில் சாதகமான அறிவிப்பு வரும் என காத்திருக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்கள்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் தேர்ச்சியடைய, ஓராண்டு கால அவகாசமே இருப்பதால், பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக, பலரும் புலம்புகின்றனர். 

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென, கடந்த 2010ல் உத்தரவிடப்பட்டது.

 இதை பின்பற்றி, கடந்த 2011ல் மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
இவ்விரு உத்தரவுகளுக்கு இடைப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் பல ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் 'டெட்' தேர்வு எழுதுவதா, தேவையில்லையா என, கல்வித்துறையும் தெளிவுப்படுத்தவில்லை.


இதோடு,ஆண்டுதோறும் முறையாக, 'டெட்' தேர்வும், நடத்தப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு, 2019க்குள், ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெறாதவர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியாது என உத்தரவிட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் பணியில் உள்ள, 'டெட்' எழுதாத ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், 320 ஆசிரியர்களுக்கு மட்டும், எந்த விலக்கும் அளிக்காமல், கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக, பலரும் புலம்புகின்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அரசு மற்றும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களோடு ஒரே சமயத்தில் பணியில் சேர்ந்த, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், விலக்கு அளிக்கப்பட வேண்டுமென, ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.


 ஜூன் மாதம் நடக்கவுள்ள, சட்டசபை கூட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றினால், பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.

Comments