SC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘மெரிட்’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை பெற முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டம் ஏராளமான மாணவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்வி சேர்க்கை விகிதம், 45 சதவீதத்தை தாண்ட இந்த திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது.
எனவே புதிய விதிகளை வகுத்து, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்று கூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்.
சமூக நீதி, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போக செய்து விடும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது. அந்த வகையில் மார்ச் மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ஆகும்.
ஏற்கனவே இருக்கும் பயன்களை குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசு திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும்.
எனவே இதில் நீங்கள் தலையிட்டு, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை பாதிக்கும் விதிகளை திரும்ப பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்