ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என, தமிழக மீன்வளத் துறைஅமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.


  சென்னை சைதாப்பேட்டையில், இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கும் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கின்றது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால் காவிரி உட்பட தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக அர்த்தமில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

அரசாங்கத்தின் கஷ்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 14,000 கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 கமிட்டிகள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை.

ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.அரசுக்கு 100 ரூபாய் வருவாய் என்றால், அதில் 70 ரூபாய் அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது. இதனைப் புரிந்துகொண்டு போராட்டக்காரர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!