நீட் தேர்வுக்காக மகனுடன் எர்ணாகுளம் சென்ற தந்தை மாரடைப்பால் மரணம்

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார்.

இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், ஓட்டலில் இருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். அவரது உடல் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகாலிங்கம் தேர்வு எழுதி வருகிறார்.

கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக தமிழக அதிகாரிகள் குழு கேரளா விரைந்துள்ளதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கிருஷ்ணசாமி அரசு ஊழியராவார். அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் சதுரங்க சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments