சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு

நிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019) சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி தெரிவித்தார்.



சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி கூறியதாவது:-

சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (ஹானர்ஸ்) விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் வழங்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 1 தேதி முதல் வழங்கப்படும். 3 ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.

மேலும், தொலைதூரக்கல்வி வாயிலாக சட்டப் படிப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பின் அது தொடங்கப்படும். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடங்கள் அரசு உத்தரவுப்படி மட்டுமே நிரப்பப்படும்.


எத்தனை இடங்கள்....

தமிழகத்தில் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1411 இடங்களும், 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1541 இடங்களும் உள்ளன. இதுதவிர சீர்மிகு சட்டப்பல்கலைக் கழகத்தில் 624 இடங்களும் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை...

சட்டப்படிப்புகளுக்கு ஆன்-லைன் வழியாகவும், விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்று விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நேரடியாக பெறலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்