விதிமுறைகளுக்கு அதிகமாக கல்விக்கடன் கோர முடியாது : மாணவி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

எந்த உத்தரவாதமும் இல்லாமல் விதிமுறைகளுக்கு அதிகமாக கல்விக் கடன் கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கூடுவாஞ்சேரி அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி ஆர்.சன்ஸ்கிரிட், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் 2016ல் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பிரிவில் சேர்ந்தேன்.

அப்போது கல்விக் கட்டணமாக ₹18  லட்சத்து 90 ஆயிரம் செலுத்தினேன். கல்லூரி குறிப்பிட்டுள்ள மீதமுள்ள தொகையை கடனாகப் பெறுவதற்காக பள்ளிக்கரணை இந்தியன் வங்கிக்கு  மனு கொடுத்தேன். ஆனால், எனது மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனக்கு கல்விக்கடன் வழங்குமாறு வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி சார்பில் ஆஜரான வக்கீல், கல்விக் கடனாக எந்த  சொத்து உத்தரவாதமும் இல்லாமல் மனுதாரர் ரூ.63 லட்சத்து 90 ஆயிரம் கோரியுள்ளார். 

விதிகளில் ஒரு குறிப்பிட்ட தொகையே கடனாகத் தரமுடியும்  என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கல்விக் கடனாக விதிமுறைகளின்படி வழங்கப்படும் தொகையை மனுதாரருக்கு ஒவ்வொரு  ஆண்டும் வழங்க வேண்டும். விதிமுறைகளுக்கு அதிகமாக மனுதாரர் கூடுதல் கடன் கோர முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Comments