"நீட்' தேர்வு: ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநர் உதவி
நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்த மேலூர் மாணவிக்கு, ஆட்டோ ஓட்டுநர் உதவியுள்ளார்.
திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு எழுத ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேலூரை அடுத்த சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்த மாணவி டயானா, அவரது தாயார் தனலெட்சுமியுடன் வந்துள்ளார்.
இங்கு வந்து பார்த்தபோது, அனுமதிச் சீட்டை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது. இதனால், மாணவியும் அவரது தாயாரும் பதற்றமடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவர், தனது காரில் மாணவி மற்றும் அவரது தாயாரை ஏற்றிக்கொண்டு, மேலூரிலுள்ள மாணவியின் வீட்டுக்குச் சென்று அனுமதிச் சீட்டை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு திரும்ப அழைத்து வந்துள்ளார்.
சுமார் 60 கிலோமீட்டர் தொலைவை தனது உயிரைப் பணயம் வைத்து அந்த மாணவிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் மணியை, டயானாவின் தாயார் தனலெட்சுமி மற்றும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்து பாராட்டினர்.
Comments
Post a Comment