ஊதிய முரண்பாடுகள்: நாளை முதல் அரசு ஊழியர் சங்கங்களுடன் கலந்தாய்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக, கோரிக்கை மனுக்களை அளித்துள்ள சங்கங்களிடம் திங்கள்கிழமை (மே 28) முதல் கருத்துகள் கோரப்பட உள்ளன.

 தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் ஊழியர் சங்கங்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துகிறது.
 தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது.
 இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் சிலருக்கு ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த முரண்பாடுகளை களையக் கோரி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகள் விடுத்தன.
 ஒருநபர் குழு அமைப்பு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழக அரசின் சார்பில், நிதித் துறை;ஈ செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சார்பில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன. இம்மனுக்களை மாநில அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், மனு அளித்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேச ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.
 நாளை முதல் பேச்சு: அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
 வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள ஒருநபர் குழுவின் தலைவர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள் கோரப்பட உள்ளன.
 ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ஐந்து நிர்வாகிகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டுமெனவும், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை ஒருநபர் குழுவிடம் தெரிவிக்கலாம் எனவும் அதன் தலைவர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்

Comments