போர்க்குணம் கொண்டு, பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய அரசுப்பள்ளி மாணவியின் உயிர் பிரிந்தது

கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்
கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் தன்நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த ப்ரீத்தி, தான் படித்து மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்த நாயகி. சிறு வயதில் இருந்தே எலும்பு வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக கடினமான நேரங்களை கடந்து வந்தவர் ப்ரீத்தி. 

இவருடன் படித்த மற்றும் பழகியவர்களுக்கு தான் தெரியும் ப்ரீத்தி விடாமுயற்சி மற்றும் போர்க்குணத்துடன் வாழ்க்கையில் போராடும் தன்மை உடையவர் என்பது.

தன் சிறுவயது முதலே, கல்வி மட்டுமே வாழ்வையும், தனது குடும்பத்தின் சூழலையும் மாற்றும் என்ற எண்ணம் கொண்டவர் ப்ரீத்தி. இதனால் படிப்பில் எப்போதும் தனது கவனத்தை வைத்திருந்தார். தாயின் அரவணைப்புடனும், ஆசிரியர்களின் ஊக்குவிப்போடும் படித்த வந்த ப்ரீத்தி 10ஆம் வகுப்பில் 468 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். 

எலும்பு வளர்ச்சியின்மை பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் இத்தனை மதிப்பெண் பெற்றது மிகப்பெரிய சாதனை தான் என மருத்துவர்களும், ஆசிரியர்களுமே பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.தன்னம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்த ப்ரீத்தியை பாராட்டும் வகையில், ‘தன்னம்பிக்கை நாயகி’ என 8.6.2017ஆம் நாள் அன்று சிறப்பு செய்தியை தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தது. 

11ஆம் வகுப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் செய்முறை கொண்ட பாடப்பிரிவை எடுக்க முடியாத சூழல் அந்த ஊரில் நிலவியது. அத்துடன் ப்ரீத்தியால் தொலைவு சென்று மேற்படிப்பை தொடர முடியாத சூழலும் ஏற்பட்டது. 

இந்நிலையில் ப்ரீத்தி படிப்பதற்காகவே, அவரது பள்ளியின் தலைமை ஆசிரியர் முயற்சி செய்து, மாவட்ட கல்வி அலுவலர் தலையிட்டு மூன்றாம் பாடப்பிரிவை பள்ளிக்கு கொண்டு வந்தனர்.


கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 468 மதிப்பெண் பெற்றபோது புதிய தலைமுறையிடம் பேசிய ப்ரீத்தி, “சிறு வயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மனிதர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்” என்று கூறிய படியே கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நிச்சயம் நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்” என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.


இந்நிலையில் 11ஆம் வகுப்பு விடுமுறையில் வீட்டில் இருந்த ப்ரீத்திக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, எலும்பு வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


தன்னம்பிக்கை நாயகியாக திகழ்ந்த ப்ரீத்திக்கு இந்த தகவல் சற்று கலக்கத்தை தந்தது. அவரது அம்மாவும் சோகக்கடலில் மூழ்கினார். இருப்பினும் மன தைரியத்துடன் வீட்டிற்கு வந்து படிப்பில் கவனத்தை தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் உடல்நிலை மேலும் மோசமடைய ப்ரீத்தி உயிரிழந்தார். 

நம்பிக்கை ஒளி மறைந்தது. வாழும் வாழ்வில் சிறு பிரச்னைகள் இருந்தாலே, புலம்பிக்கொண்டு வாழும் அனைவருக்கும் ப்ரீத்தி போன்ற ‘தன்னம்பிக்கை நாயகிகள்’ ஒரு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்