ஐஐடி மாணவருக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு!

இந்தியதொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) படித்துவரும் ஆராய்ச்சி மாணவரின் விருப்பத்தை ஏற்று, தான் அணிந்திருந்த மாலையை அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.

 மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா நகரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தங்க நிற மாலையை அணிந்துகொண்டு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
 ரமேஷ் குமார் சிங் என்ற மாணவர், சுட்டுரையில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், தனக்கு அந்த மாலை மீது விருப்பம் இருப்பதாகவும், அது தனக்கு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 இந்நிலையில், அவரது முகவரிக்கு அந்த மாலையை பார்சலில் அனுப்பி வைத்து மோடி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
 இதுகுறித்து ரமேஷ் குமார் சிங் கூறியதாவது:
 பிரதமர் மோடியின் உரையை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தேன். அப்போது, அவரது கழுத்தில் ஒரு மாலை அணிந்திருந்ததைக் கண்டேன். அது எனக்கு மிகவும் பிடித்துபோனது. அந்த மாலை கிடைக்கப் பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று சுட்டுரையில் பிரதமர் கணக்கில் எனது முகவரியுடன் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டேன். அந்த மாலை எனக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை. ஆனால், கடந்த 1-ஆம் தேதி அந்த மாலை எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒன்றும் இருந்தது. அதில், "உங்கள் சுட்டுரைப் பதிவை படித்தேன். நீங்கள் விரும்பிய மாலையை உங்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கிறேன்' என்று மோடி குறிப்பிட்டிருந்தார் என்றார் ரமேஷ் குமார் சிங்.
 இந்தத் தகவலை முகநூலில் அவர் பதிவு செய்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அவரது தங்கும் விடுதிக்கு வந்து அந்த மாலையை கண்டு ரசித்ததுடன், அவருக்கு வாழ்த்துகளையும் கூறிவிட்டு சென்றனர்.
 ரமேஷ் குமார் சிங், உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் பிஹெச்டி படித்து வருகிறார்.

Comments