வேலைக்கு வர முடியாது: அரசு அதிகாரி!தான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி என்று கூறிக்கொண்டு, "உலக மனசாட்சியை மாற்றுவதற்கு தவம் செய்துவருவதால் வேலைக்கு வர முடியாது” என்று குஜராத் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக ரமேஷ்சந்திரா பெஃபர் பணியாற்றிவருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வருவதில்லை. கடந்த 8 மாதங்களில் இவர் 16 நாட்கள்தான் அலுவலகம் வந்துள்ளார், இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு, அவர், ”நீங்கள் நம்பவில்லை என்றாலும், உண்மையில் நான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம்தான். இதை வரவிருக்கும் நாட்களில் நிரூபிப்பேன். 2010ஆம் ஆண்டில் மார்ச் மாதம் அலுவலகத்தில் இருந்தபோது, நான் ஒரு கல்கி அவதாரம் என்பதை உணர்ந்துகொண்டேன். அப்போதிருந்து எனக்கு தெய்வீக சக்தி உண்டு. நான் செய்த தவத்தின் பயனாக, கடந்த 19 ஆண்டுகளாக நாட்டில் மழை பெய்துவருகிறது.

நான் உலக மனசாட்சியை மாற்ற ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து வீட்டில் தவம் செய்துகொண்டிருக்கிறேன். அலுவலகத்தில் உட்கார்ந்திருந்து இந்த தவத்தைச் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.

மேலும், அலுவலகத்தில் உட்கார்ந்து நேரத்தை வீணடிக்கவா அல்லது வறட்சியில் இருக்கும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமா என்பதை நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Comments