மத்திய அரசு அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றம்

 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுதுபவர்களுக்கு முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண், மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்படும்.
இது தான் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள் கடுைமயாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வில் மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை சேர்த்து பணிகள் ஒதுக்கப்படும். அதாவது அவர்களுக்கு ஐஏஎஸ் பணி ேவணுமா, ஐ.பி.எஸ். பணி வேணுமா என்பது ஒதுக்கப்படும். எந்த மாநிலத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்பதையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, மத்திய அரசு ஒரு யோசனையை கேட்டுள்ளது. அதாவது மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முசௌரிக்கு வர வேண்டும்.
அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அந்த பயிற்சிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களை சேர்த்து ஐஏஎஸ், ஐபிஎஸ் பணி கிடைக்குமா? என்பதை முடிவு செய்வோம். எந்த மாநிலத்திற்கு போகிறீர்கள் என்பதும் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் முசௌரியில் உள்ள 10 பேராசிரியர்கள் நினைத்தால் போதும் முதல் மதிப்பெண் எடுத்தவரை 900வது ரேங்கில் கொண்டு போய் வைக்க முடியும். அதே போல் குறைந்த மதிப்பெண் எடுத்தவரை போய் முதல் மதிப்பெண்ணுக்கு கொண்டுவர முடியும். யார் எந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்பதை சிலர் முடிவு செய்யும் நிலை ஏற்படும். எந்த மாநிலத்திற்கு கொண்டு போக வேண்டும் என்பது நடக்கும். இதனால் யு.பி.எஸ்.சி.க்கு உள்ள மரியாதை கெடுக்கப்படும். இது நடைமுறை சிக்கல் மட்டுமல்லாமல், அநீதியின் உச்சக்கட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் ஆதங்கம்
இது குறித்து ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி பெரும் மாணவர்கள் கூறியதாவது: பயிற்சியில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பணிகள் ஒதுக்கப்படும் என்பதை எந்த மாணவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால், முறைகேடுகளும், வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் தான் ஆதிக்கம் செலுத்தும் நிலை தான் ஏற்படும். இதற்காக கஷ்டப்பட்டு படித்து வருபர்களின் ஐஏஎஸ், ஐ.பி.எஸ். கனவு கனவாகவே போய்விடும். எனவே மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்த கூடாது. இதை ஆரம்பித்திலேயே எதிர்க்க வேண்டும்

Comments