ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவன விவகாரம்: பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி வகுப்புகளை மூடுவதற்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி, ஆரம்பக் கல்வியை மேம்படுத்த கடந்த 1992-ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான கல்வி பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சி பட்டய வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன.
 இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20-இல், மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி வகுப்புகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த 9-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அனைத்து மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு உத்தரவு உள்ளது. பட்டயப் பயிற்சி வகுப்புகள் மூடப்படுவதால் ஏழை- எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்கள் என வாதிடப்பட்டது.
 வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளர், தமிழக பள்ளிக்கல்வி துறைச் செயலாளர், மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வரும் ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்

Comments