அரசுப் பள்ளிகள் கேரளாவின் வெற்றிக் கதை!!!
ஒழுகும் சாலைகள், உடைந்த நாற்காலிகள், அழுக்கடைந்த கழிப்பறைகள் மற்றும் அலட்சியமான ஆசிரியர்கள் ஆகியவை காலாவதியாகி விட்டன. அடுத்தநாளன்று தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக முந்தைய நாளே கண்ணூரில் உள்ள அரசுப்பள்ளியின் வாசலில் பெற்றோர்கள் தற்போது உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இடதுசாரி அரசாங்கத்தின் "பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கம்" என்ற முதன்மைத் திட்டம்தான் இத்தகைய மாற்றத்திற்கான காரணமாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்றுவிப்புத்தரம் ஆகிய இரண்டையும் உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்துவதை இந்தஇயக்கம் இலக்காகக் கொண்டது. கடந்த ஆண்டில், வழக்கத்தை விட 1 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர்.
நடப்பாண்டைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது இரண்டு லட்சம் அதிக மாணவர்கள் என்பதையும் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 45 ஆயிரம் வகுப்பறைகள் உயர்தர தொழில்நுட்பம் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான வேலைகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், இதன் பலன்களைஅனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மடிக்கணினி, மல்டிமீடியா ப்ரொஜெக்டர், காட்சிப்படங்களைத் திரையிடும் வகையில் வர்ணம் அடிக்கப்பட்ட சுவர்கள்,ஒலிபெருக்கிகள், தடையில்லா இணைய இணைப்பு மற்றும் சமாக்ரா என்ற இணையதளத்தை எப்போதும் பார்ப்பதற்கான வசதி ஆகியவை கிட்டத்தட்ட 3 ஆயிரம் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் செய்யப்பட்டுள்ளன.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், கட்டணம் கட்டுவதற்கு பெற்றோர்களை மூச்சுத் திணறச் செய்யும் பல்வேறு தனியார் கல்வி நிலையங்களில் கூட இந்த வசதிகள் இல்லை. மின்னணு முறையிலான பாடத்திட்டத்தைத் தயாரிக்கவும், பாடங்களைக் கற்பிக்க டிஜிட்டல் முறையில் திட்டமிடுவதற்கும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மிகவும் தகுதியான, மாநில தேர்வாணையம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூடுதல் ஊக்கம் பெற்றிருக்கிறார்கள் என்பது சாதகமான அம்சமாகும். தரமான கல்வி பற்றிய கேலிக்குத் தாங்கள் ஆளாக வேண்டுமோ என்று தனியார் பள்ளிஆசிரியர்களைப் பார்த்து இவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
கல்வி நிலையத்தின் குறிப்பான தேவைகளுக்குப் பொருந்துமாறு ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் கல்வித்திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு அரசின் மீதும் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வந்த, தாமதமாக பாடப்புத்தகங்களை வழங்குவது மற்றும் மோசமான துணிகளால் ஆன சீருடை ஆகியவை கடந்த கால செய்திகளாகமாறிப் போயின.
தனது இரண்டாவது ஆண்டை நிறைவுசெய்து கொண்டிருக்கும் சூழலில் பொதுக் கல்வித்துறையில் முக்கியமான மாற்றத்தைச் செய்திருக்கிறோம் என்று கேரள அரசால் உரக்கச் சொல்லிக் கொள்ள முடியும்.
நன்றி : தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம்(மே 10)தமிழில் : கணேஷ்
Comments
Post a Comment