மாணவர்களின் கல்வியின் தரம் உயர்த்தப்படுமா?

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன. நமது கல்வியில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டியது நமது தலையாய கடமையாகும். 


இன்று ஆங்கில வழிக்கல்வி மீது மக்களுக்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுள்ளது. தமிழைப் புறக்கணிக்கக்கூடாது. தமிழைப் பொறுத்தவரை சில செய்யுள் பகுதிகள் மட்டும் மனப்பாடம் செய்ய வேண்டியது இருக்கும். மற்றபடி எல்லாப்பாடங்களையும், பொதுவாகப் புரிந்து படிக்க வேண்டிய மனப்பக்குவத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். எல்லா பாடங்களையும் மானப்பாடம் செய்யவைப்பது மிகப்பெரிய தவறு.

மாணவர்கள் தனியாகச் சிந்திக்கின்ற தன்மையை உருவாக்குவதோடு, சொந்தமாக எழுதுகின்ற வழக்கத்தையும் கொண்டு வர வேண்டும். அதற்கு மனப்பாடம் செய்தலும், ஒப்பித்தலும் பரம எதிரிகளாக அமையும் என்பது திண்ணம். மாணவர்களை, ‘இந்த பாடத்தைதான் படிக்க வைக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்போதுதான் மாணவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லவர்களாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் கல்வியைப் புகட்ட வேண்டும். பள்ளிக்கூடங்களிலேயே திறனாய்வுத் தேர்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும். இனி வரும் மாணவச் சமுதாயம், கடுமையான போட்டிகள் நிறைந்த ஒரு உலகத்தை சந்திக்க இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்வதில் பள்ளிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். 

மேல்நிலைப்பள்ளி படிப்பு வரை தான் கல்வி நிலையங்கள் ஒரு மாணவனுக்கு ஆடுகளமாக அமையும். எனவே அந்தக் காலக்கட்டத்தில் அவனுக்கு எல்லா பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். கல்லூரிப்படிப்பின் போது மாணவனின் எண்ணங்கள் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே ஒரு மாணவனை பக்குவப்படுத்துவதற்கு வேண்டிய இடமே ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு மாணவர்களுக்கு பொது அறிவுச்சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். வினாடி-வினா போன்ற நிகழ்வுகளை அடிக்கடி பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும். திறன் அறியும் தேர்வு முறைகளை கல்வியில் புகுத்த வேண்டும். பக்கம் பக்கமாக எழுதுகின்ற முறையினை மாற்றி எதிர்காலத்திற்குத் தேவையான நுண்ணிய, நுணுக்கமான முறைகளை கல்வியில் புகுத்தினால் நாடு நலம் பெறும்.

Comments