பர்ஃபெக்ட் பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு அதிகம் கிடைப்பது நன்மைகளா... தீமைகளா?
''எல்லாவற்றிலும் சரியாக நடந்துகொள்ள வேண்டும், செய்கிற வேலைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் பர்ஃபெக்ஷன் மனிதர்கள், சமூகத்தின் வரங்கள் என்றுதான் சொல்லுவேன். இப்படிப்பட்ட பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளையும் தங்களைப்போலவே பர்ஃபெக்ட்டாகவே வளர்க்க ஆசைப்படுவார்கள். இந்த பர்ஃபெக்ஷன், பிள்ளைகளுக்குப் பலவிதங்களில் நன்மை செய்யும் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல கொஞ்சம் அளவு மிஞ்சினால், பிள்ளைகளை மன அழுத்தத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதும் உண்மையே.
என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
* இந்த வகை பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள், ஸ்கூலுக்கு, ஸ்போர்ட்ஸுக்கு என்று எல்லா இடங்களுக்கும் சரியான நேரத்துக்குச் சென்றுவிடுவார்கள். மற்றவர்களைவிட இவர்களிடம் 'நேரத்துக்குச் செல்ல வேண்டும்' என்கிற ஒழுக்கம் அதிகமாக இருக்கும்.
* இந்த வகை பெற்றோர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள், பின்னாளில் எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தாலும், தனக்காக மற்றவர்கள் காத்திருப்பதை விரும்பமாட்டார்கள். 8 மணிக்குச் செல்லவேண்டிய இடத்துக்கு, ஏழரை மணிக்கே ஆஜராகிவிடுவார்கள்.
* தன்னைத் தானே மதிப்பதுபோல, அடுத்தவர்களையும் மதிப்பார்கள். மற்றவர்களைச் சரிசமமாக நடத்தும் இயல்பு இந்த வகை பெற்றோரின் குழந்தைகளிடம் அதிகம் இருக்கும்.
* தன் பொருளை மட்டுமின்றி, அடுத்தவர் பொருளையும், அரசாங்கப் பொருள்களையும் வீணாக்க மாட்டார்கள்.
* ஒரு அறையைவிட்டு வெளியே சென்றாலும், விளக்கு, மின்விசிறி என எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுச் செல்லும் பிள்ளைகள் இவர்கள்தான்.
* ஹோம்வொர்க் முடித்து இரவே புத்தகங்களை பைக்குள் பர்ஃபெக்ட்டாக வைக்கும் இயல்பு இவர்களிடம் இருக்கும்.
* உணவுப் பொருளை வீணாக்க மாட்டார்கள்.
* டைம் மேனேஜ்மென்ட், டேபிள் மேனர்ஸ் பக்காவாக இருக்கும்.
* கீழே தண்ணீர் சிந்தியிருந்தால் அழகாகத் துடைத்து எடுப்பார்கள். வீணான பொருளை ஒரு நிமிடமும் தாமதிக்காமல் குப்பைக்கூடையில் போடுவேன் என்று அடம்பிடிக்கிற பிள்ளைகள் இவர்கள்.
என்னென்ன தீமைகள் கிடைக்கும்?
* குழந்தைகள் செய்யும் எல்லா விஷயங்களிலும் உங்கள் பர்ஃபெக்ஷனை வலிந்து திணிக்கும்போது, அவர்களின் இயல்பு தொலைந்துபோகும்.
* அவர்கள் வயதுக்கு ஏற்றபடி பர்ஃபெக்ஷனை சொல்லிக்கொடுங்கள். 4 வயதுக் குழந்தையை 'ஏன் தண்ணியை திறந்துவிட்டே?' என்று கையை ஓங்கினால், அது தவறு.
* பாத்ரூம் போனால் தண்ணீர் ஊற்றிவிட்டு வரவேண்டும் என்று சொல்வது சரி. ஆனால், தரையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அதட்டினால், அது குழந்தையைப் பதற்றப்படுத்தவே செய்யும்.
* அலமாரியில் இருக்கும் ஒரு பொருள் கொஞ்சம் நகர்ந்திருந்தாலும், பிள்ளைகளைத் திட்டுவது தவறான ஃபர்ஃபெக்ஷன். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'. ஃபர்பெக்ஷன் அதிகமானால், குழந்தைகளின் சந்தோஷம் காணாமல் போய்விடும். உங்களை வெறுப்பார்கள். குழந்தைகளை அணைப்பது ஓகே. ஆனால், மூச்சு முட்ட அணைத்தால்... அதுபோலதான் இதுவும்.
Comments
Post a Comment