சென்னையில் இன்று முதல் பள்ளி வாகனங்கள் ஆய்வு!
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, செவ்வாய்க்கிழமை முதல் 4 நாள்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சென்னையில் 5 இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில், அப்பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழாண்டுக்கான ஆய்வு, மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 11 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலப் போக்குவரத்து ஆணையரகத்தின் இணை ஆணையர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மே 15 முதல் மே 18 -ஆம் தேதி வரை 4 நாள்கள், 5 இடங்களில் பள்ளி வாகனங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:
தமிழ்நாடு மோட்டார் வாகன (பள்ளி பேருந்துகள் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012 -ன்படி, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மே 15 -ஆம் தேதி டிஆர்ஜெ மருத்துவமனை பின்புறத்திலும், 16 -ஆம் தேதி சேத்துபட்டு எம்சிசி மற்றும் நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்திலும் இந்த ஆய்வு நடைபெறும். இதேபோன்று 17 -ஆம் தேதி அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத்திலும் (கடற்கரை சாலை அருகில்), 18-ஆம் தேதி செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியிலும் வாகனங்களின் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் பள்ளியில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டுவந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட வாகனத்தின் முகப்பில் ஸ்டிக்கர் ஹாலோகிராம் ஒட்ட வேண்டும். குறைபாடு உள்ள வாகனங்களையும், ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்களையும் வேறு ஒரு நாளில் ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment