புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ("எஸ்சிஇஆர்டி') செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கும், ஏற்கெனவே பணியில் உள்ளோருக்கும் தேவையான பயிற்சிகளை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளித்து வருகிறது. இதற்காக மாவட்டங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பயிற்சியின் அவசியம் என்ன?
இப்போது பாடத் திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி அளிப்பது அவசியமாகிறது.எனவே, இப்போதுள்ள மாவட்ட அளவிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க தமிழக அரசுக்கு மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
அதன்படி, பணிக்கு முந்தைய பயிற்சிகளை மட்டும் அதிகளவு அளிக்க 12 மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் அதன் அருகேயுள்ள மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 12 மாவட்ட நிறுவனங்கள், பணிக்கு முந்தைய பயிற்சிகளை அளிப்பதில் கவனம் செலுத்தும்.
மாவட்டங்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி:
சென்னை மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்துடன் வேலூர், கடலூருடன் விழுப்புரம், கிருஷ்ணகிரியுடன் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டத்துடன் நாமக்கல், கரூர் , பெரம்பலூருடன் திருச்சி, அரியலூர்,திருவாரூர் மாவட்டத்துடன் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டையுடன் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகருடன் மதுரை, தேனியுடன் திண்டுக்கல் மாவட்டமும், கோத்தகிரியுடன் கோவை, திருப்பூரும், திருநெல்வேலியுடன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்டை மாவட்டங்களை இணைத்துப் பயிற்சி அளிக்கப்படும்.ஆனாலும், இந்த 12 மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைத் தவிர்த்து தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள20 மாவட்ட நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மட்டுமே அளிக்கும்.
அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டுமே அளித்திடும்.
மொத்தம் 704 பேரின் மேற்பார்வையில்...
ஒவ்வொரு மாவட்ட பயிற்சி நிறுவனத்தில் ஒரு முதல்வர், ஒரு துணைமுதல்வர், 5 மூத்த விரிவுரையாளர்கள், 14 விரிவுரையாளர்கள், ஒரு நூலகர் இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 22 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 704 பேர் பணியில் இருப்பர்.
Comments
Post a Comment