பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழைய பாட புத்தகங்கள் நீக்கம்

வரும் கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் இணையதளத்தில் இருந்து, பழைய பாட புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன்; செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றதும், அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினர். இதில் முக்கியமாக, ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இந்த பணிகள், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப்யாதவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஜூன், 1ல் துவங்கும், புதிய கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, புதிய பாடத் திட்டத்தின் புத்தகங்கள் நவீன தொழில்நுட்பம், பல வண்ணங்கள், பார்கோடுகள், சித்திரங்கள், வீடியோ படங்கள் என, சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. 


இந்த புத்தகங்கள், ஜூன், 1ல் பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதேநேரம், புதிய பாடத்திட்ட புத்தகங்களை, டிஜிட்டல் முறையில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய வசதியாக, தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக இணைய தளத்தில், புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

இதற்கு வசதியாக, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in இணையதளத்தில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளின், பழைய புத்தகங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், புதிய புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் அறிவித்துள்ளது. 

Comments