மாடு மேய்க்கும் சிறுவனுக்கு என்னென்ன திறமைகள் இருக்கும்?’ - ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி




மாடு மேய்க்கும் சிறுவனுக்கு என்னென்ன திறமைகள் இருக்கும்?’ - ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி இது. எல்லோரும் அமைதியாக இருக்க, ஒருவர் எழுந்து, ‘மாட்டை எப்போது குளிக்க வைக்கணும், எப்போது தீனி வைக்கணும்...’ என 22 திறமைகளைப் பட்டியலிட்டார். பயிற்சியாளரின் அடுத்த கேள்வி, ‘பள்ளியில் படிக்கும் மாணவருக்கு என்னென்ன திறமைகள் இருக்கும்?’ எவ்வளவு தூரம் பட்டியலை நீட்டியும் ஏழு, எட்டைத் தாண்டவில்லை. எனக்குள் கல்வி பற்றிய மாற்றுக்கோணத்தைக் ஏற்படுத்திய தருணம் அதுதான்’’ என்கிறார் ராஜேந்திரன் தாமரப்புரா.

கேரளாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பாடக்குழுவில் பங்களிப்பு செலுத்தியவர். ஒரு சப்ஜெக்ட், அதை வருடம் முழுக்க ஒரே ஒரு கதையின் வாயிலாக மாணவர்களைச் சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் கற்கவைப்பது... என இவர் காட்டும் புதிய கல்விமுறைக்கான நீள் கதைப் பாடத்திட்டம், பலரையும் புருவம் உயர்த்த வைக்கிறது.

“தாமரப்புரா என்பது என்னுடைய வீட்டின் பெயர். தாமரப்புரா என்றால் தாமரை வடிவில் இருக்கும் வீடு. பிறந்தது கேரளாவின் எல்லையோரப் பகுதியிலுள்ள கோழிப்பாறை எனும் கிராமத்தில். தாய்மொழி மலையாளம் என்றாலும், அப்பா என்னைத் தமிழ்வழிக் கல்வியில் சேர்த்தார். ஆசிரியர் பயிற்சி முடித்து, கொல்லம் மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

எங்கள் தமிழாசிரியர் கே.சி.கங்காதரன் பாடப்புத்தகப் பணிமனைக்கு என்னை அழைத்துச்செல்வார். இறுதியாகும் பாடங்களை கார்பன் வைத்து அழுந்த எழுதி காப்பி எடுப்பதுதான் என் வேலை. ஒருமுறை, அவருக்கு உடல்நலம் இல்லாததால், பாடப்புத்தகத்துக்கு ஒரு கதை எழுதச் சொன்னார். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடத்திலும் வைக்கப்பட்டது. நான் எழுதிய கதையை நானே பாடமாக நடத்தினேன். தொடர்ந்து, மாநில அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேதான் என் பார்வையை மாற்றிய அந்த இரண்டு கேள்விகளும் கேட்கப்பட்டன.”



“நீள் கதைப் பாடத்திட்டம் உருவானது எப்படி?”

“நான் பல ஆண்டுகளாகக் கேரள பள்ளிப் பாடத்திட்டக் குழுவில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய பணிக்காலத்தின் இறுதியில் கோழிப்பாறையில் ஆசிரியராகப் பணியாற்றியபோதுதான், நாம் உருவாக்கும் பாடங்களை மாணவர்கள் விரும்புவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். சுமார் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 71 நாள்கள் பயிற்சி அளித்து, அது எந்தளவுக்கு வகுப்பறையில் என்ன மாற்றத்தைத் தந்திருக்கிறது என ஆய்வு செய்ததில், 200 ஆசிரியர்கள் மட்டுமே நம்பிக்கை அளிப்பவர்களாக இருந்தார்கள். இது மிகுந்த சோர்வைத் தந்தது.

அந்த நேரத்தில்தான், அமெரிக்க அறிஞர் நோம் சாஸ்கியின் சீடரும், ஆங்கிலப் பேராசிரியருமான கே.என்.ஆனந்த்தின் அறிமுகம் கிடைத்தது. அவர் வீட்டில் தங்கியிருந்தபோது, அருகேயிருந்த மாணவர்களை ஒருங்கிணைத்து சஸ்பென்ஸ் கதையோடு பாடத்தைக் கற்பிக்க முயன்றோம். அது நல்ல பலனைத் தந்தது. ஆனால், அதை அப்போது தொடர முடியவில்லை. சில கல்வி ஆர்வலர்கள், பாடங்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியைப் பற்றி விவாதித்தோம். கறுப்பு மைக்குள் புதைகொண்டிருக்கும் புதையலைக் கண்டுபிடிப்பதே வாசிப்பு. ஆனால், ஆசிரியர்கள் அந்தப் புதையலைத் திறந்து திறந்து காட்டிப் பூட்டிவிடுகின்றனர். அதனால், மாணவர்களே அந்தப் புதையலைத் தேடிக் கற்றுக்கொள்ளும் விதத்தில் உருவானதுதான் நீள் கதைப் பாடத்திட்டம்.

நீள் கதைப் பாடத்திட்டத்தில், பல திருப்பங்கள் கொண்ட ஒரே ஒரு கதைதான் வருடம் முழுவதும் வரும். அதில் சில கதாபாத்திரங்கள் இருப்பார்கள். உதாரணமாக, எல்.கே.ஜி கதை ஒன்றைப் பார்ப்போம். ‘பண்பழகியும் செழியனும் பள்ளிக்குப் புறப்பட்டார்கள்’ என அந்தக் கதையை ஆசிரியர் சொல்லத் தொடங்கி, ‘சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது ‘ம்... ம்...’ எனச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையை நோக்கி செழியன் சென்றான்.  சாலையின் ஓரத்தில் செடியின் அடியில் அந்தச் சத்தம் வந்தது. அங்கே சென்று பார்த்தபோது ஏதோ அசைவதுபோல இருந்தது. ‘ஏ பண்பு... இங்கே வந்து பாரேன்’ எனக் கூப்பிட்டான். அவளும் வந்து பார்த்துவிட்டு, ‘ஓ நீயா!’ என்றவளின் முகம் மலர்ந்தது’ என்று சொல்லி, அந்த இடத்தில் கதையை நிறுத்திவிடுவார். மாணவர்கள், அங்கே என்ன இருந்தது என தங்களின் யூகத்தில் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை வரிசையாகக் கரும்பலகையில் ஆசிரியர் வரைவார். இத்தனை விடைகளில், எது அந்தக் கதையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வரும். அந்த நேரத்தில், சரியான விடையடங்கிய அட்டையை எல்லோருக்கும் கொடுப்பார். அட்டையில் வரையப்பட்டிருக்கும் வடிவத்தோடு கரும்பலகையில் ஆசிரியர் வரைவார். இத்தனை விடைகளில், எது அந்தக் கதையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வரும். அந்த நேரத்தில், சரியான விடையடங்கிய அட்டையை எல்லோருக்கும் கொடுப்பார். அட்டையில் வரையப்பட்டிருக்கும் வடிவத்தோடு கரும்பலகையில் உள்ளவற்றில் எது பொருந்துகிறது எனப் பார்ப்பார்கள். ‘நாய்க்குட்டி’ எனச் சரியாகச் சொன்ன குழந்தையின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் வரும். கற்றல் இப்படித்தான் இனிமையாகத் தொடங்குகிறது. கதை சொல்லும் ஆசிரியரைக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்றால், கதையை மட்டுமே சொல்லும் ஆசிரியர் என்றால் கேட்கவே வேண்டாம். இருவருக்குமான உறவு வலுப்படும். இதனால், குழந்தைகள் தங்களை அறியாமலேயே பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்.”



“இந்தக் கற்பித்தல் முறை எந்த வகுப்பு வரை சாத்தியமாகும்?”

“ஐந்தாம் வகுப்புவரை பயிற்சியளித்து வந்திருக்கிறோம். தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் கதைகள் தயார் செய்து வருகிறேன். அந்தக் கதை அடர்த்தியாக இருக்கும். இந்த முறையில் கற்கும்போது பாடத்தின் பொருள் புரிந்துகொண்டு கற்பது வெகு இயல்பாக நடக்கிறது. யாருடைய துணையும் இல்லாமலேயே படிக்க இயலும். திருச்சி, வெள்ளக்குளம் பள்ளியில் 2009 -10 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த முறை பயிற்சி அளித்து ஏழாம் வகுப்பு சென்ற மாணவர்கள், இரண்டே மாதங்களில் அந்த வருடப் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டனர். மீதமிருக்கும் எட்டு மாதங்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர் சிறுவர்களுக்கு எழுதிய நூல்களை மாதம் ஒரு நூல் எனப் படிக்கவைத்தோம். ஜெயமோகனின் ‘பனி மனிதன்’ நாவலின் தொடர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை எழுதுமளவுக்குத் தேறிவிட்டார்கள்.”

“கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு இந்த முறை பலன் அளிக்குமா?”

“நிச்சயமாக. ‘அம்மா தோசை சுட்டாங்க’ எனச் சொல்லி, கைகளால் வட்டம் இடச் சொல்லி, ஒன்று, இரண்டு என எண்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அந்த எண்களை அவர்களுக்கு நன்கு அறிமுகமாக்கிவிடுவோம். பிறகு, அதை எழுதச் சொல்வதும் கூட்டல், கழித்தல் போன்றவற்றைச் செய்யவைப்பதும் எளிது. மொழியைக் கற்பிப்பதும் அறிவியலைக் கற்பிப்பதும் வேறு வேறு அணுகுமுறைகள். அறிவியலைப் பொறுத்தவரை மாணவரின் மனத்தில் ஒரு பிரச்னையைத் தோன்றச் செய்ய வேண்டும். உதாரணமாக,  `இரவில் பூக்கும் பூக்கள் அனைத்தும் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?’,  `மின்சாரத்தின் நிறம்தான் என்ன?’ - இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடவைப்பதே அறிவியலைக் கற்பிப்பதற்கு ஏற்ற வழி.”



“தற்போது பரவலாக இருக்கும் கல்வி முறையில் அடிப்படைச் சிக்கல் என்று எதைச் சொல்வீர்கள்?”

“இது ஆசிரியர்களுக்குத் தகுந்த விதத்தில் எழுதப்பட்ட பாடமுறை. குழந்தைகளுக்கான கற்றல் முறை என்பது வேறு. இரண்டு வயதுக் குழந்தை டி.வி ரிமோட்டை எப்படிச் சரியாக இயக்குகிறது..? அதைக் கற்றுக்கொள்ள குழந்தையைத்  தூண்டுவது எது? அதுபோன்றதொரு கற்றல் முறைக்கு ஏற்றதாக தற்போதைய பாடமுறை இல்லை. கற்றல் என்பது குழந்தையைத் தேடவைக்க வேண்டும். கொஞ்சம் சிரமப்படச் செய்ய வேண்டும். அது தரும் பதில்களில் பல கேள்விகளைக் கேட்டு அதைத் தெளிவாக்க வேண்டும். சிக்கல்களை உடைக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் நாளை தனக்குத் திடீரென முளைக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள அக்குழந்தையால் முடியும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டு, மீண்டு வர முடியும்.’’



பாடங்கள் பொதிகளாக மாறியிருக்கும் இந்தச் சூழலில், ராஜேந்திரன் பூட்டாமல் திறந்துவைக்கும் புதையல்கள் அற்புதமானவை.

Comments

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்