மாணவர் முதல் மதிப்பெண் என்று விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை : பள்ளிகளுக்கு கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை

சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் தொடர்பாக விளம்பரப்படுத்தினால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.  

மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் அரோக்கியமற்ற போட்டிச் சூழலை உருவாக்கும் நிலையைதவிர்க்கும் வகையில், மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முக்கிய இடம் பெறும் மாணவர்களின் பெயர்களை வெளியிடும் நடைமுறையை கைவிடுதல் தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் தொடர்பாக விளம்பரப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர், புகைப்படம் தாங்கிய விளம்பர பிரசுரங்களை வெளியிடுதல், விளம்பரம் ெசய்தல் போன்ற செயல்பாடுகளை தவிர்க்க அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தக்க அறிவுரை வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். 

Comments