BE - பொறியியல் கல்லூரி சேர்க்கை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை அரசரடி அன்புநிதி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறையை மேற்கொள்ள, தமிழக உயர்கல்வி முதன்மைச் செயலர், 2017 நவம்பரில் உத்தரவிட்டார். அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சாத்தியமில்லை. பலருக்கு இன்டர்நெட், வங்கி கணக்கு வசதி இல்லை. ஐம்பது சதவீத மாணவர்கள், தமிழ் வழியில் பிளஸ் 2, படித்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும். சாதாரண விண்ணப்ப முறையில் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள், எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைத்துறை செயலர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தனியார் இன்ஜி., கட்டண நிர்ணயம் மனு தள்ளுபடி :

தனியார் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளுக்கு, கட்டணம் மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் சங்க தலைவர் கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில், 527 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு குழு அமைத்தது. குழு பரிந்துரையின்படி, கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட்டது. குழு, 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை பின்பற்ற வேண்டும் என்றது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தை பின்பற்ற 2017ல் சுற்றறிக்கை வெளியிட்டது.

இதனால், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையும். இதற்கேற்ப சுயநிதி தொழில் கல்வி வழங்கும் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகளுக்கு, 2018 - 19 மற்றும் 2019 - 2020 கல்வியாண்டிற்கு கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய, தமிழக உயர்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள், எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்