நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.5 கோடி செலவு' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு பயிற்சிக்கு, ஐந்து கோடி ரூபாய் செலவானது, என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், மொடச்சூரில் நேற்று, அவர் அளித்த பேட்டி: நடப்பாண்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு, 27 ஆயிரத்து, 205 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட, 'ஹெல்ப் லைன்' எண்ணுக்கு, 3,860 பேர் தொடர்பு கொண்டனர். இதில், சந்தேகங்கள் தான் நிவர்த்தி செய்யப்பட்டன. எந்த குற்றச்சாட்டும் வரவில்லை.தமிழகத்தில், 412 மையங்களில், நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயிற்சிக்காக, 72 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர்; 8,226 பேர் மட்டுமே வந்தனர். இவர்களில் நல்ல மதிப்பெண் பெற்ற, 3,154 பேருக்கு, 26 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, ஐந்து கோடி ரூபாய் செலவானது. இந்தியாவிலேயே இம்முயற்சியை நாம் தான் மேற்கொண்டோம். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளியை, சீர் செய்வது குறித்து, துறை ரீதியாக ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments